TNSTC faces revenue loss of INR 1.25 Crores per day due to non-operation of AC Services


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
கொரோனாவால் 11 மாதங்களாக 250 அரசு ஏ.சி.பேருந்துகள் இயங்காததால் தினமும் ரூ. 1.25.கோடி வருவாய் இழப்பு.
தமிழகத்தில் கரோனாவால் 11 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 250 அரசு ஏ.சி. பேருந்துகள் மூலம் தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 250 ஏ.சி. பேருந்துகள் உள்ளன. ஒரு பேருந்தின் விலை ரூ.24 லட்சம். இப்பேருந்துகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன. இவை 250 கி.மீ.க்கு மேல் நெடுந்தூர வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
இப்பேருந்துகளில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள்அதிக அளவில் பயணம் செய்தனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது கரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏ.சி. பேருந்துகள் இதுவரை இயக்கப்படவில்லை.
கடந்த 11 மாதங்களாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போக்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏ.சி. பேருந்துகள் பழுதடைந்துள்ளன. மேலும் இப்பேருந்து டிக்கெட் வசூல் மூலம் தினமும் ஒரு பேருந்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைக்கும். 250 பேருந்துகளுக்கு தினமும் மொத்தம் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனத்தின் இணைப் பொதுச் செயலர் எஸ்.சம்பத் கூறும்போது,ஏ.சி. பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படாவிட்டால் ஏ.சி. இயந்திரங்கள் பழுதடையும். இதனால் ஏ.சி. பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றார்.
நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆர்வலர் வழக்கறிஞர் அருண்குமார் கூறுகையில், தமிழகத்தில் கரோனாவை அரசு சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. வெயில் அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏ.சி. பேருந்துகளை அரசு உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொகுப்பு,
TNSTC Enthusiasts