புதிய வண்ணத்தில் நகரப் பேருந்துகள், அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.
நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரையும் அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும், ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும், 31 ஆயிரம் கோடி அளவில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் டிக்கெட் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தார்.
இயக்கப்படும் பேருந்துகளில் 6262 பேருந்துகள் சாதாரண பேருந்துகள் எனவும், பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு டிக்கெட் வழங்கவும் தனியாக புதிய வண்ணத்தில் டிக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
27 மாவட்டங்களுக்கு நேற்று இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.